புதன், 14 ஜூலை, 2010

தமிழ் இணைய மாநாடும் நானும்... நாய கூட யாரும் விரட்டலை... ஆனால்.. அழைத்து அவமானப் படுத்தியதாக நான் உணர்கிறேன்...

ஜூன் 27 அன்று மின் தமிழ் குழுமத்தில் நான் இட்ட மடல் என் வலை பூ பார்வையாளர்களுக்காக.. இங்கே மறு பதிவு இடுகிறேன்...


அன்பர்களுக்கு வணக்கம்..
நான் என் மனதில் பட்ட சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..
முதலில் நான் என்னைப் பற்றி அறிமுகம் செய்கிறேன், நான் மின் தமிழ் உறுப்பினராக
இருந்தாலும் இது வரை என்னைப் பற்றிய அடிப்படை தகவலை அறிமுகம் செய்து
கொள்ளவில்லை..
நான் சக்திவேல்.. சில நேரங்களில் என்னை முட்டாளாக எனக்கு நானே அடையாளம்
காண்பவன் .. படிப்பு 10 மட்டும் தான்..
ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே ஒரு சிறு
கிராமம்.. என் ஊர்.. பிறந்தது படித்தது.. இப்போது இருப்பது எல்லாம் இங்கே
தான்.. ஊரின் பெயர் பட்டிமணியகாரன்பாளையம்..

பத்திரிகை செய்தியாளனாக என்னை 6 வருடங்கள் அடையாளம் காட்டிக் கொண்டேன்.
சமூகத்தின் மீதான அக்கறை பத்திரிகைகளின் சுயபுராணத்தினை சார்ந்து தொடர்ந்து
பத்திரிகை செய்தியாளனாக இருக்க விடவில்லை. பத்திரிகை செய்தியாளனாக இருந்த நான்
2005 இல் சிற்றிதழ் வட்டார செய்தி இதழ் ஆரம்பித்து ஒரு சமூக அக்கறை கொண்ட
பத்திரிகையாளனாக என்னை மாற்றிக் கொண்டேன்.. காலத்தின் மாற்றம் நான்
பத்திரிகையினை 6 இதழ்களோடு வெளியிடுவதை நிறுத்திக்கொண்டேன்.

கிராமம் மற்றும் விவசாயம் சார்ந்தோரின் முன்னேற்றத்திற்காக.. இப்போது தமிழ்
வேளாண் இணைய தளத்தினை ஆரம்பித்து நடத்தி வருகிறேன்...
www.agriinfomedia.com

விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் விபரங்களை வலையில் ஏற்றுவது....
விவசாயம் சார்ந்த இணைய பதிவுகளை அதிகப் படுத்துவது..

என்ற இலக்கினை மையப் படுத்தி பயணப்படுகிறேன்...
இந்த இழையில் ... நான் உங்களிடம் பல நிகழ்வுகளை... பகிர்ந்து
கொள்ளப்போகிறேன்...

*தமிழ் இணைய மாநாடும் நானும்...*

நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு அழைப்பு உங்களின் தளம் குறித்தும் உங்கள் தள
தேவைக்கு தேவையான உதவிகள் குறித்து பேசிட நல்ல வாய்ப்பு..
உங்களால் 15 நிமிடம் பேச முடியுமா? என்று.. நானும் விளக்கமாக கேட்டேன்..
பின்னர் சரியென கூறினேன்... நம் முயற்சி வெளி உலகிற்கு நன்கு அறியப் படும் என
ஆனந்தப் பட்டேன்.. நான் பேச அழைக்கப் பட்ட இடம் உலகத் தமிழ் இணைய மாநாடு...

இணையத்தில் வேளாண்மை தகவல்கள் என்று பேசுவதற்காக நானும் தயாரானேன்.. சூன் 27
காலை 10.45 முதல் 11 மணி வரை என்று எனக்கு நேரம் ஒதுக்கி இருப்பதாக மின்னஞ்சல்
தகவல் வந்தது.

24 அன்று வலைபதிவர்கள் கட்டுரை வாசிக்க நேரம் ஒதுக்காததால் சலசலப்பு ஏற்பட்டதை
அறிந்து.. மின்னஞ்சல் ஊடாக அனுமதி சீட்டு மற்றும் மாநாட்டு அரங்கத்திற்கு
வருவது குறித்து தகவல் கேட்டு அனுப்பினேன்...

ஒரு பெண் கவிஞர் 24 அன்று மாலையில் என் செல்பேசிக்கு அழைத்து 27 அன்று பேச
நேரம் அளித்திருப்பதை உறிதி செய்தார்.. நானும் அவரிடம் அனுமதி சீட்டு பற்றிக்
கேட்டேன்.. அது பிரச்சனை இல்லை.. அருகில் வந்து தன்னார்வலர்கள் இருப்பாங்க..
அவங்க கிட்ட சொன்னாபோது வழிகாட்டுவாங்க என்றார்.. அப்பாடா என்ற உணர்வு...

ஆனால்.. நானும் இன்று சூன் 27 மாநாட்டு வளாகம் சென்றேன்..
முரசொலி மாறன் அரங்கில் பேச அனுமதி..
சரி முரசொலி மாறன் அரங்கம் தேடி சென்றேன்.. கொடிசியா வளாகத்தின் உள்ளே..
அரங்கம்.. சரி என தன்னார்வலகள் சிலரிடம் கேட்டால்.. காவல்துறையினரின் பக்கம் கை
காட்டினார்கள்..
காவல் துறை அதிகாரி ஒருவரிடம் இது குறித்து பேசினால்.. பாஸ் இருந்தா போலாம்...
இல்லைனா.. முடியாது என்றார்.. அழைப்பு மற்றும் மின்னஞ்சல் தகவலை கூறீயும்..
அவர் அனுமதிக்கவில்லை (அவர் கடமை சரியா பண்ணினார்). இது குறித்து உள்ளேதான்
விசாரிச்சு பாருங்க.. என்னை பேச அழைத்திருக்கிறார்கள்.. என்றேன்.. எனக்கு அது
வேலை இல்லை.. பாஸ் இல்லைல... போ என்றார்.. நான் ஏதும் பேசாமல்.. சரி நமக்கு
அழைத்து போனில் பேசியவரிடம் பேசலாம் அன்று அழைத்தால் இணைப்பே கிடைக்கவில்லை..
அதற்குள் காவல் துறை அதிகாரியின் சத்தம் போடா... என்று... எனக்கு மனம் அப்போது
தான் வழித்தது.. அவர் கடமை அவர் செய்யுறார்... கடமையை சரியாக செய்யாதவர்கள்
யார்? அவர்கள் செய்த தவறால்.. பல பேர் முன்னிலையில் பெருத்த அவமானம்.. என்
உருவமும் அப்படி.. மெல்லிய உடம்பு.. சிறு பிள்ளை போல பார்க்க... விரட்டி
அடிக்கப் படாத குறையாக கொடிசியா முன்பகுதியில் இருந்து அதாவது ஊடக அரங்கம்
அருகில் .. இருந்து விரட்டப் பட்டேன்.

எனக்கு நடந்த இந்த வேதனை நிகழ்வு இன்னும் யாருக்கெல்லாம் நடந்ததோ... இவர்கள்
இப்படி செய்ததற்கு பேசுங்கள் என்று அழைக்காமலே இருந்திருக்கலாம்..

எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் நான்...
ஆனாலும் நம் தளம் பற்றி பேச ஒரு வாய்ப்பு என்று தான் நான் சென்றேன்... என்னை
முன்னிலைப் படுத்த அல்ல...

எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் வேதனையில் என் சமூக எண்ணங்களை நான்
முன்னெடுத்து செல்லும் வேளையில்.. வீண் செலவு செய்ய வைத்த இந்த நிகழ்வினை என்ன
சொல்ல... அதைவிட அழைத்து அவமானப் படுத்திய இந்த நிகழ்வினை என்ன சொல்ல...

பேச அழைத்தவர்களுக்கு கூட சரியான அனுமதி அட்டை இல்லை.. அனுமதி இல்லை.. எப்படி
நிகழ்ச்சிகள் இருந்திருக்கும் என்று சிந்திக்க வைக்கிறது.

வெறும் தமிழ் கண்டுபிடிப்புகள், மென்பொருட்கள் மற்றும் கதை கட்டுரை
எழுதும்,நாட்டு நடப்புகளை சொல்லிக் கொண்டிருக்கும் தளங்கள்.. இவைகள் மட்டும்
போதுமா... இந்த மனித வாழ்க்கையின் முதன்மையானது உணவு.. உணவினை உற்பத்தி செய்வது
விவசாயிகள்.. விவசாயிகள் பலன் அடைய வேண்டும்.. விவசாயம் பற்றி அனைவரும்
தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப் பட்டுள்ள தளமே
www.agriinfomedia.com ஆகும்/.. வாருங்கள்.. நீங்களாவது.. என் சேவையின் பயன்
அறிந்து... விவசாயம் விவசாயி.. பற்றி அறிந்து கொள்ளுங்கள்..

நான் சக்திவேல்..

நான் சொல்லும் கருத்துக்களை கேட்டு என்னை மாநகரத்து வாசி என்றும்.. மாபெரும்
பணக்கார குடும்பத்தினை சார்ந்தவனாகவும் இருக்க வேண்டும்.. என்று பல குழுமத்தில்
சொல்ல கேட்டிருக்கிறேன்.. காரணம், அரசு மானியங்கள் மற்றும் இலவசங்களை வேண்டாம்
என்று சொல்வதால்.. இங்கு இப்படி யாரேனும் சொல்லிடாதிங்க.. நான் அசல்
பட்டிக்காட்டான்.. கடனுக்கு கம்பியூட்டர் வாங்கி... ஏதோ இப்படி எழுதிட்டு
இருக்கேன் என் மனசுல பட்டதை..