ஞாயிறு, 31 அக்டோபர், 2010

இனியது என்பது...
இருப்பது மட்டும் அல்ல...
நினைப்பதும் தான்...

கடந்த 2009 ம் ஆண்டு துவக்கத்தில் வலைபதிவு எழுத வேண்டும் என ஆரம்பித்த நான்.. ஆரம்பத்தில் எழுதிய பதிவு விவசாய செய்திகள்... வலை உலவி மையத்திற்கு சென்று எழுத வேண்டிய நிலை தொடர்ந்து எழுத முடியவில்லை...
சொந்த கணினி வாங்கி எழுத நினைத்தது 2009 மார்ச்... கிராமம் என்பதால் என் பகுதியில் இணைய இணைப்பு இல்லை.. கிடைப்பதில் கால தாமதம். ஜூலை மாதத்தில் கிடைத்தது. அதுவும் வில் தொலைப்பேசி மூலமாக... சரி என என் கனவான தமிழ் வேளாண்மை தளத்தினை ஆகஸ்ட் 10 அன்று துவக்கிட இணையப் பெயர் பதிவினை செய்தேன். சரி நமக்கு என ஒரு வலை பூ வேண்டும் என செப்27 ல் கற்றது கைமண்ணளவு எனும் இந்த வலைபூ வினை எழுத ஆரம்பித்தேன். தினசரி ஏதாவது எழுத நினைப்பேன். ஆனால்.. வேளாண் தள பணிச்சுமையால் இன்று வரையிலும் தினசரி எழுத வேண்டும் என்ற எண்ணம் நடைமுறைக்கு வரவில்லை... நான் இந்த வலைபூவினை துவக்கிய நாளில் என்னைப் பற்றி எழுதிய வரிகளை இந்த இணைப்பில் காணலாம்... http://www.ssvl.in/2009/09/blog-post.html

இதோ அன்று நான் எப்படி... இன்று நான் எப்படி...

இதோ இன்று என்னைப் பற்றி மீண்டும் ஒரு முறை இன்றைய நாளில் நான் ..

நான் சக்திவேல்..

நான் சக்திவேல்... யார் கேட்டாலும் இப்படிச் சொல்லிப் பழகியது இன்று பெயரோடு ஒட்டிக்கொண்டது..



நான் முட்டாள்..

புனைப்பெயர்... பெரிய கவிஞனும் அல்ல... பெரிய எழுத்தாளனும் அல்ல... ஆனாலும் குழுமத்தில் மடல்கள் இட எனக்கு ஒரு புனைப்பெயர் தேவைப்பட்டது..
எனக்கு நானே வைத்தும் கொண்டேன்... நான் முட்டாள்.....



படிப்பு....

அன்றும் பத்து.. இன்றும் பத்து... என்றும் பத்து....
ஆமாமுங்க... இனியா படிக்கப் போறோம்... நம் எண்ணங்களை மற்றவர்கள் படிக்க நாம் நடந்தால் போதும் இனி வரும் காலங்களில்....


தொழில்...

அப்போ... பத்திரிகை செய்தியாளர் ..
இப்போ... பத்திரிகையாளர்... சமூக ஆர்வலர்...


கடந்த ஒரு வருடம்...பற்றி..

கடந்த ஒரு வருடம் மட்டும் அல்ல... பொது வாழ்வில் நாட்டம் எனக்கு சமூக ஆர்வம் உண்டு,, என பத்திரிகைப் பணிக்குள் பிரவேசித்த கடந்த 10 வருடங்களில் பலரின் அறிமுகங்கள்... பலரின் எண்ணங்களையும் அறியும் வாய்ப்பு...

ஆனாலும் கடந்த வருடம்

வியாழன், 14 அக்டோபர், 2010

அழிக்கப்படும் புராதனங்கள் - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு ஒரு வேண்டுகோள்


Posted by fourthpress on October 13, 2010
ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை

புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?




தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே - - - --- -- - ->>>>>>>




மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

- நான் முட்டாள்...

தகவல் அளித்த ஆருரான் அவர்களுக்கு நன்றி...

நன்றி:-http://fourthpillar.wordpress.com/


புதுக்கோட்டை ஆட்சியர் மின் அஞ்சல் முகவரி:-

To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.
Regds:\



collrpdk@tn.nic.in





நான் இந்தியன் அல்ல..
தமிழனும் அல்ல..
இந்து அல்ல...
இஸ்லாமியனும் அல்ல...
கிறிஸ்தவனும் அல்ல...
நான் மனிதன்...


- நான் முட்டாள்

சனி, 14 ஆகஸ்ட், 2010

இனியொரு விதி செய்வோம்... என்றான் ... ஆனால்
இனியொரு விதி செய்வோம் என்றே சென்றது,. .. இதுவரை ஏது செய்ய வில்லை..
எனக்கேன் வம்பு என நினைக்கிறார்கள்

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

சிந்தியுங்கள்... வெறும் பொழுது போக்கும் பேச்சுக்களும் இந்த மக்களின் வாழ்வினை மாற்றிவிடாது...

இருப்பதும் நிஜம் இல்லை என்பதும் நிஜம்...
பாடு பட்டு உழைத்து ஊருக்கு உணவளிக்கும் உழவன் நிலை இப்படி தான்...
ஏன் யாரும் இது பற்றி பேசத் தயங்குகிறீர்கள்...
காலம் கடந்த அனுபவம் என்று கதை பேசும் ஆட்கள் தான் அதிகம்....

உலகம் நான் சுற்றினேன்... கதையாய் எழுதினேன்... இதனால் யாருக்கு என்ன இலாபம்...
தன் கதை சொல்ல ஒரு சுயசரிதை படைக்கும் எண்ணத்தில் தான் பலரும்...
நேற்று நடந்தது இன்று நினைக்கையில் ஆனந்தமாய் இருக்கலாம் ..... ஆனால்...
நேற்றும் இன்றும் வறுமையில் வாழும் மக்களின் நிலை அறிந்ததில்லையா? இல்லை அறிந்தும்
நான் என்னைப் பற்றி மட்டுமே பேசுவேன் எனும் மனநிலையா????


ஏர்முனை தான் அவன் வேலை ... அவன் கையில் கணினி எதற்கு என்று குரல் கொடுக்கும் உத்தமர்களே...
உங்களுக்கு ஏர்முனை வேண்டாம் என்றால்.. எங்களுக்கும் ஏதும் வேண்டாம் ... ஏர்முனை தவிர...
நாங்கள் உழைப்பது எமக்கு மட்டும் அல்ல... உமக்கும் தான்... நீ காசு வாங்காமலா செய்கிறாய்.. என
நீ கேட்பது புரிகிறது... நான் காசு மட்டும் போதும் என நினைத்திருந்து
வேறு பணி செல்லத் துவங்கினால்... உன் கதி... உணவிற்கு என்ன செய்வாய்...
உலகம் விட்டு என்றோ சென்றிருப்பாய்..

உழவன் சொல் இன்று அல்ல.. என்றாவது ஒருநாள் உனக்கு வேதமாய் இருக்கும்...
அப்போது உணர்வாய்... உலகம் உழவர்கள் கையில் என்பதனை...
உலகம் சுற்று... இல்லை ஊரைச்சுற்று... அப்படியே... அப்பகுதி மக்களின் வாழ்வியலை
அறிந்து வா..? காசு பார்க்க நீ உலகம் சுற்றுகிறாய்... உன் புகழ் பரப்ப... எழுத்துக்களால்
அதனை அழங்காரம் செய்கிறாய்... இது உன் அகங்காரம் காட்டும் வகை ......


காலம் செல்லும்... அப்போது அந்த காலமும் சொல்லும்...


கனவுகள் அல்ல... இது... கற்பனையும் அல்ல...
கால்கள் வெடித்து.. கண்கள் கசங்கி காரிருள் வரையிலும் கழனியில்
வேலை... கஞ்சிக்கும் வழி இல்லை.. காலணா காசுக்கும் வழி இல்லை.. என கசங்கி நிற்கும்
மக்கள் வாழும் மண்ணில் வசந்தம் என பாடும் உமக்கு என்ன தெரியும்...

சுத்தும் பூமியில்... சுத்தம் பற்றி பேசுவதும்... ஊர் சுற்றுவதும்,..
சுற்றிய சுதந்திரத்தினை சுயபுராணம் பாடுவதும்.. இந்த வலையுலகில்
வானுயர்ந்து கிடக்கிறது,... வெறும் கதைகளும் கற்பனைகளும்...
பழைய கதைகளும்,காவியங்கள் ஆகி விடாது...

நீ எழுதும் வார்த்தைகள் பொழுது போக்காய் இருந்து விடக்கூடாது...
இந்த வலையுலகில் உன் வார்த்தைகள் குப்பைகளை சேர்த்துவிடக்கூடாது....
உயந்த நல்லெண்ணங்கள்... உன் வார்த்தைகளில் தெரியட்டும்...
உன் சொல் செல்லா இடம் ஏதும் இருக்காது...


இந்த உலகில் உணவு உடை இருப்பிடம் இம்மூன்றும் முக்கியம் என்பதனை நீ அறிவாய்..
ஆனால்... உணவும் உடையும் உழவனின் உழைப்பு என்பதனை என்று உணர்வாய்...
கயவர்கள் பின்னே செல்லும் அரசியல்... இல்லை.. கயவர்கள் மட்டுமே அரசு இயலாய்..
எப்படி இயலும் அரசு இயல்பாய்...

எந்த இடம் சென்றாலும் தன் புகழால் மயங்கிறவர் கிடக்கின்றார்..

இது குறித்தும் மக்களின் எண்ணங்கள் குறித்தும் தொடரும் மடல்களில் .... ...


நான் முட்டாள்....
சக்திவேல்...

புதன், 14 ஜூலை, 2010

தமிழ் இணைய மாநாடும் நானும்... நாய கூட யாரும் விரட்டலை... ஆனால்.. அழைத்து அவமானப் படுத்தியதாக நான் உணர்கிறேன்...

ஜூன் 27 அன்று மின் தமிழ் குழுமத்தில் நான் இட்ட மடல் என் வலை பூ பார்வையாளர்களுக்காக.. இங்கே மறு பதிவு இடுகிறேன்...


அன்பர்களுக்கு வணக்கம்..
நான் என் மனதில் பட்ட சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..
முதலில் நான் என்னைப் பற்றி அறிமுகம் செய்கிறேன், நான் மின் தமிழ் உறுப்பினராக
இருந்தாலும் இது வரை என்னைப் பற்றிய அடிப்படை தகவலை அறிமுகம் செய்து
கொள்ளவில்லை..
நான் சக்திவேல்.. சில நேரங்களில் என்னை முட்டாளாக எனக்கு நானே அடையாளம்
காண்பவன் .. படிப்பு 10 மட்டும் தான்..
ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே ஒரு சிறு
கிராமம்.. என் ஊர்.. பிறந்தது படித்தது.. இப்போது இருப்பது எல்லாம் இங்கே
தான்.. ஊரின் பெயர் பட்டிமணியகாரன்பாளையம்..

பத்திரிகை செய்தியாளனாக என்னை 6 வருடங்கள் அடையாளம் காட்டிக் கொண்டேன்.
சமூகத்தின் மீதான அக்கறை பத்திரிகைகளின் சுயபுராணத்தினை சார்ந்து தொடர்ந்து
பத்திரிகை செய்தியாளனாக இருக்க விடவில்லை. பத்திரிகை செய்தியாளனாக இருந்த நான்
2005 இல் சிற்றிதழ் வட்டார செய்தி இதழ் ஆரம்பித்து ஒரு சமூக அக்கறை கொண்ட
பத்திரிகையாளனாக என்னை மாற்றிக் கொண்டேன்.. காலத்தின் மாற்றம் நான்
பத்திரிகையினை 6 இதழ்களோடு வெளியிடுவதை நிறுத்திக்கொண்டேன்.

கிராமம் மற்றும் விவசாயம் சார்ந்தோரின் முன்னேற்றத்திற்காக.. இப்போது தமிழ்
வேளாண் இணைய தளத்தினை ஆரம்பித்து நடத்தி வருகிறேன்...
www.agriinfomedia.com

விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் விபரங்களை வலையில் ஏற்றுவது....
விவசாயம் சார்ந்த இணைய பதிவுகளை அதிகப் படுத்துவது..

என்ற இலக்கினை மையப் படுத்தி பயணப்படுகிறேன்...
இந்த இழையில் ... நான் உங்களிடம் பல நிகழ்வுகளை... பகிர்ந்து
கொள்ளப்போகிறேன்...

*தமிழ் இணைய மாநாடும் நானும்...*

நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு அழைப்பு உங்களின் தளம் குறித்தும் உங்கள் தள
தேவைக்கு தேவையான உதவிகள் குறித்து பேசிட நல்ல வாய்ப்பு..
உங்களால் 15 நிமிடம் பேச முடியுமா? என்று.. நானும் விளக்கமாக கேட்டேன்..
பின்னர் சரியென கூறினேன்... நம் முயற்சி வெளி உலகிற்கு நன்கு அறியப் படும் என
ஆனந்தப் பட்டேன்.. நான் பேச அழைக்கப் பட்ட இடம் உலகத் தமிழ் இணைய மாநாடு...

இணையத்தில் வேளாண்மை தகவல்கள் என்று பேசுவதற்காக நானும் தயாரானேன்.. சூன் 27
காலை 10.45 முதல் 11 மணி வரை என்று எனக்கு நேரம் ஒதுக்கி இருப்பதாக மின்னஞ்சல்
தகவல் வந்தது.

24 அன்று வலைபதிவர்கள் கட்டுரை வாசிக்க நேரம் ஒதுக்காததால் சலசலப்பு ஏற்பட்டதை
அறிந்து.. மின்னஞ்சல் ஊடாக அனுமதி சீட்டு மற்றும் மாநாட்டு அரங்கத்திற்கு
வருவது குறித்து தகவல் கேட்டு அனுப்பினேன்...

ஒரு பெண் கவிஞர் 24 அன்று மாலையில் என் செல்பேசிக்கு அழைத்து 27 அன்று பேச
நேரம் அளித்திருப்பதை உறிதி செய்தார்.. நானும் அவரிடம் அனுமதி சீட்டு பற்றிக்
கேட்டேன்.. அது பிரச்சனை இல்லை.. அருகில் வந்து தன்னார்வலர்கள் இருப்பாங்க..
அவங்க கிட்ட சொன்னாபோது வழிகாட்டுவாங்க என்றார்.. அப்பாடா என்ற உணர்வு...

ஆனால்.. நானும் இன்று சூன் 27 மாநாட்டு வளாகம் சென்றேன்..
முரசொலி மாறன் அரங்கில் பேச அனுமதி..
சரி முரசொலி மாறன் அரங்கம் தேடி சென்றேன்.. கொடிசியா வளாகத்தின் உள்ளே..
அரங்கம்.. சரி என தன்னார்வலகள் சிலரிடம் கேட்டால்.. காவல்துறையினரின் பக்கம் கை
காட்டினார்கள்..
காவல் துறை அதிகாரி ஒருவரிடம் இது குறித்து பேசினால்.. பாஸ் இருந்தா போலாம்...
இல்லைனா.. முடியாது என்றார்.. அழைப்பு மற்றும் மின்னஞ்சல் தகவலை கூறீயும்..
அவர் அனுமதிக்கவில்லை (அவர் கடமை சரியா பண்ணினார்). இது குறித்து உள்ளேதான்
விசாரிச்சு பாருங்க.. என்னை பேச அழைத்திருக்கிறார்கள்.. என்றேன்.. எனக்கு அது
வேலை இல்லை.. பாஸ் இல்லைல... போ என்றார்.. நான் ஏதும் பேசாமல்.. சரி நமக்கு
அழைத்து போனில் பேசியவரிடம் பேசலாம் அன்று அழைத்தால் இணைப்பே கிடைக்கவில்லை..
அதற்குள் காவல் துறை அதிகாரியின் சத்தம் போடா... என்று... எனக்கு மனம் அப்போது
தான் வழித்தது.. அவர் கடமை அவர் செய்யுறார்... கடமையை சரியாக செய்யாதவர்கள்
யார்? அவர்கள் செய்த தவறால்.. பல பேர் முன்னிலையில் பெருத்த அவமானம்.. என்
உருவமும் அப்படி.. மெல்லிய உடம்பு.. சிறு பிள்ளை போல பார்க்க... விரட்டி
அடிக்கப் படாத குறையாக கொடிசியா முன்பகுதியில் இருந்து அதாவது ஊடக அரங்கம்
அருகில் .. இருந்து விரட்டப் பட்டேன்.

எனக்கு நடந்த இந்த வேதனை நிகழ்வு இன்னும் யாருக்கெல்லாம் நடந்ததோ... இவர்கள்
இப்படி செய்ததற்கு பேசுங்கள் என்று அழைக்காமலே இருந்திருக்கலாம்..

எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் நான்...
ஆனாலும் நம் தளம் பற்றி பேச ஒரு வாய்ப்பு என்று தான் நான் சென்றேன்... என்னை
முன்னிலைப் படுத்த அல்ல...

எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் வேதனையில் என் சமூக எண்ணங்களை நான்
முன்னெடுத்து செல்லும் வேளையில்.. வீண் செலவு செய்ய வைத்த இந்த நிகழ்வினை என்ன
சொல்ல... அதைவிட அழைத்து அவமானப் படுத்திய இந்த நிகழ்வினை என்ன சொல்ல...

பேச அழைத்தவர்களுக்கு கூட சரியான அனுமதி அட்டை இல்லை.. அனுமதி இல்லை.. எப்படி
நிகழ்ச்சிகள் இருந்திருக்கும் என்று சிந்திக்க வைக்கிறது.

வெறும் தமிழ் கண்டுபிடிப்புகள், மென்பொருட்கள் மற்றும் கதை கட்டுரை
எழுதும்,நாட்டு நடப்புகளை சொல்லிக் கொண்டிருக்கும் தளங்கள்.. இவைகள் மட்டும்
போதுமா... இந்த மனித வாழ்க்கையின் முதன்மையானது உணவு.. உணவினை உற்பத்தி செய்வது
விவசாயிகள்.. விவசாயிகள் பலன் அடைய வேண்டும்.. விவசாயம் பற்றி அனைவரும்
தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப் பட்டுள்ள தளமே
www.agriinfomedia.com ஆகும்/.. வாருங்கள்.. நீங்களாவது.. என் சேவையின் பயன்
அறிந்து... விவசாயம் விவசாயி.. பற்றி அறிந்து கொள்ளுங்கள்..

நான் சக்திவேல்..

நான் சொல்லும் கருத்துக்களை கேட்டு என்னை மாநகரத்து வாசி என்றும்.. மாபெரும்
பணக்கார குடும்பத்தினை சார்ந்தவனாகவும் இருக்க வேண்டும்.. என்று பல குழுமத்தில்
சொல்ல கேட்டிருக்கிறேன்.. காரணம், அரசு மானியங்கள் மற்றும் இலவசங்களை வேண்டாம்
என்று சொல்வதால்.. இங்கு இப்படி யாரேனும் சொல்லிடாதிங்க.. நான் அசல்
பட்டிக்காட்டான்.. கடனுக்கு கம்பியூட்டர் வாங்கி... ஏதோ இப்படி எழுதிட்டு
இருக்கேன் என் மனசுல பட்டதை..

சனி, 3 ஜூலை, 2010

தமிழகம் விற்பனைக்கு..

தமிழகம் விற்பனைக்கு..... தமிழக முதல்வர் ஒப்பந்தம்... இப்படி விரைவில் செய்தி வந்தாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை... நாம் தான் நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும்...


எச்சரிக்கை:
எல்லோருக்கும் வணக்கமுங்க... நேற்று(ஜூலை-2-2010) நான் படித்த செய்தி எனக்குள் பகீர் என்று தூக்கி வாரிப் போட்டது.. என்னன்னு கேட்குறீங்களா? இதோ அந்த செய்தி படிங்க முதல்ல... ஏன் இந்த பகீர் என்பது குறித்து செய்தியினைத் தொடர்ந்து சொல்லுகிறேன்....


நாமக்கல், மேட்டுப்பாளையத்தில் அதிக ப்ளாட்டினம்-சுரங்கத்துறை உதவியுடன் தோண்ட உடன்பாடு

விலை உயர்ந்த பிளாட்டினம் கனிம படிவங்கள், தமிழகத்தில் நாமக்கல், கோவை மாவட்டங்களில் மிக அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் ஆய்வு செய்யப்படுவதற்கான ஒப்பந்தம், முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் ஜுலை.1 அன்று கையெழுத்தானது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்திற்கடியில் படிந்துள்ள வெண்தங்கம் எனப்படும் பிளாட்டினம் கனிமத்தைக் கண்டறிவதற்காக இந்திய புவியியல் ஆய்வுத் துறை கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது. இதன் பயனாக, இதுவரை மேட்டுப்பாளையம் முதல் நாமக்கல் வரை பல்வேறு பகுதிகளில் நிலத்திற்கு அடியில் பிளாட்டினம் படிமங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள பிளாட்டினம் கனிமங்களை வணிக நோக்குடன் ஆய்வு செய்யவும், அக்கனிமங்களை பயன்படுத்தி பல்வேறு தொழில்களைத் தொடங்கவும், மேலும் புதிய இடங்களில் கனிமங்கள் குறித்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளவும் தமிழ்நாடு கனிம நிறுவனம், இந்திய புவியியல் ஆய்வுத்துறையுடன் இணைந்து விரிவான அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ள, நேற்று மாலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் அடிப்படையில் கோவை மேட்டுப்பாளையம் மற்றும் நாமக்கல் வரை பூமிக்கடியில் உள்ள பிளாட்டினம் படிமங்களை வெட்டியெடுப்பதற்கான சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை கோட்டையில் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் அவரது அறையில் நடைபெற்ற இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கொல்கத்தாவில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுத்துறை டைரக்டர் ஜெனரல் என்.கே.தத்தா, தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் க.மணிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வின்போது, சட்ட அமைச்சர் துரைமுருகன், சுரங்கத் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், தமிழக தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் பொதுமேலாளர் வி.மனோகரன் தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் தங்க கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.


நாயர் மற்றும் இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் இயக்குனர் நாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் கடந்த 2,3 ஆண்டுகளாக பிளாட்டினம் கனிமத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்கு, இந்திய புவியியல் துறை இப்பணியில் உதவி வருகிறது. இதில், நாமக்கல் மாவட்டம் சத்தம்பூண்டியிலும், மேட்டுப்பாளையத்திலும் பிளாட்டினம் படிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் மிக அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

சத்தம்பூண்டி பகுதியில் 27 சதுர கி.மீ. பரப்புக்கு பிளாட்டினம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல், மேட்டுப்பாளையம் பகுதியில் 5 சதுர கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது. ஆனால், இன்னும் 150 கி.மீ. பகுதியில் பிளாட்டினம் உள்ளது.

தற்போது, 30 மீட்டர் ஆழம் மட்டுமே தோண்டியுள்ளோம். இன்னும் 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை தோண்டும்போது மிக அதிக அளவில் பிளாட்டினம் கிடைக்கக்கூடும். உலகில் தற்போது, தென்னாப்பிரிக்காவில்தான் அதிக அளவில் பிளாட்டினம் வெட்டியெடுக்கப்படுகிறது. உலகில் கிடைக்கும் 100 சதவீத பிளாட்டினத்தில் 70 சதவீதம் தென்னாப்பிரிக்காவில்தான் கிடைக்கிறது.

இந்தியாவில் ஒரிசாவில் மட்டும் ஓரளவு பிளாட்டினம் கிடைத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில்தான் முதல்முறையாக மிக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தமிழகத்தையே சேரும். மத்திய அரசு, பிளாட்டினம் கண்டறிவதில் உதவி மட்டுமே அளிக்கும். பிளாட்டினம் இருக்கும் இடங்களில் கனிமத்தை வெட்டியெடுப்பதில் தனியாரை ஈடுபடுத்துவது, அதை விற்பனை செய்வது என அனைத்திலுமே தமிழக அரசுதான் முழுபங்கு வகிக்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் இப்போது கிடையாது. இன்னும் அந்த அளவுக்கு பணிகள் செல்லவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.

இது தாங்க அந்த பகீர்க்கான காரணம்...

விவசாயம் வளரணும்... அப்போது தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் மேம்படும் இது தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி... இது அனைவரும் அறிந்தது... என்ன தான் தொழில் துறையில் வளர்ச்சி ஏற்பட்டாலும் அதன் மூலம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி... நிலையானது அல்ல. என்பதனை இந்த ஆட்சியாளர்கள் உணரவில்லை..போலும். ஏன் பொருளாதார வல்லுனர் எனப்போற்றப் படும் நம்ம பிரதமர் கூட அறியவில்லை போலும்.. தமிழ் தமிழர்கள் என பேசும் நம் முதல்வரும் அறிந்திருக்கவில்லையா? இது தான் நம் கேள்வி..

இன்று கடனால் தத்தளித்த விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகள் மனதில் மதிப்பினைப் பெற்ற கருணாநிதி தான்... இன்று இந்த நாமக்கல் மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதி விவசாயிகளின் வாழ்க்கையில் மாபெரும் ஆப்பு வைக்க களம் இறங்கி இருக்கிறார்... என்பதனையே இந்த மத்திய அரசுடனான பிளாட்டினம் ஒப்பந்தம் காட்டுகிறது..

இதற்கும் பத்திரிகைகள் ஜால்ராக்களை கையில் எடுத்து.. பிளாட்டினம் தமிழகத்தில் வெட்டி எடுக்கப்பட்டால்... தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறிவிடும் என்று கதை கட்டி வருகிறது... (பார்க்க... தினத்தந்தி ஜூலை 2)


எப்படிங்க வளம் கொழிக்கும்...
தமிழகத்தில் இன்று பரவலாக விவசாயம் செய்வோரும் சரி விவசாய நிலமும் சரி குறைந்து கொண்டே வருகிறது... எப்படி வளம் கொழிக்கும்...
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் ஆனால்.. நாமக்கல்,ஈரோடு,திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள்... விவசாய மாவட்டங்களை அதிகம் உள்ளடக்கிய பகுதிகள்... கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்கள்... வீட்டு மனைகளாக மாறி வருகிறது.. இதனையும் அரசு தடுத்த பாடில்லை... இதற்கு காரணம் ஆட்கள் பற்றாக்குறை.. ஆனால்.. இதற்கு தீர்வு காணாமல்... ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் இருந்த சில விவசாய வேலை ஆட்களையும் தினம் தினம் சுற்றுலா அழைத்து செல்வது போல அழைத்து சென்று.. வெட்டி மாநாடு நடத்த விட்டுள்ளனர்... ஆமாங்க... உங்க பக்கத்துல ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துல வேலை செய்யுறவங்களை போயி பாருங்க.. புரியும்... நான் சும்மா சொல்லுறதா நினைக்காதீங்க... வேலைக்கு ஆட்கள் இல்லைனு வேண்டும் என்று குறை சொல்வதாகவும் நினைக்காதீங்க... நானும் மத்திய அரசு ஊழியரின் மகன் தானுங்க.. ஆமாங்க... எங்க அம்மாவும்... ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துல பயனாளி... இனி எப்பவுமே இவங்க ஓட்டு சூரியனுக்கு தானாம்.. ஏன்னு கேட்டா.. வேலை செய்யுறமோ இல்லையோ கூலி தர்றாங்க... என்றார்... போதுமுங்களா? நானும் என் அம்மாவிடம் இங்கு வேண்டாம் வீட்டில் இருக்க வேண்டியது தானே.. இருக்கும் மாடுகளை பார்க்கலாம்னு சொன்னா கேட்க மாட்டேன்னு சொல்லுறாங்க.. காரணம்.. சொல்லப்போனால்.. தினசரி அதிக பட்சம் 3 மணி நேரம் தான் வேலை செய்வார்களாம்..

சரி இது ஒரு பக்கம்... விவசாயிகளுக்கு மாநில அரசும் மத்திய அரசும் ஆப்பு வச்ச கதை எல்லோரும் தெரிஞ்சது தான்...
இப்போ இன்னொரு பக்கம் கோவை ஈரோடு நாமக்கல் விவசாயிகளுக்கு ஆப்பு வைக்க ரெடி ஆகிட்டு இருக்காங்க...

ஆனால்.. இந்த ப்ளாட்டினம் கதையை என்ன சொல்லுறது...
விவசாயிகள் மக்கள் விழிப்படைய வில்லை எனில்.. இன்று காவிரி நீருக்கும், முல்லை பெரியாருக்கும் கையேந்து நிலைதான் நாளைய நம் உணவுத் தேவைக்கும்...

இந்த பிளாட்டினத்தால்.. தமிழக அரசின் வருமானம் உயரலாம்... ஆனால்.. மக்களின் வாழ்வு உயராது...

இப்போதைக்கு நிலம் கையகப்படுத்துதல் இல்லை என்று சொல்கிறது அரசு.. ஆனால்.. இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் பிளாட்டினம் இருப்பது உறுதிப் படுத்தப் பட்டால்.. நிச்சயம் நிலம் கையகப் படுத்துதல் திட்டம் அமலுக்கு வரும்.. அப்பகுதி விவசாயிகளும் அம்போ என்ற நிலைக்குத் தள்ளப் படும் சூழல் உருவாகும்...


இந்த நிலை வர வேண்டுமா?
மக்கள்.. நடுத்தெருவில் .. அதன் மூலம் நாட்டின் வருமானம் பெருகும்
வளம் கொழிக்கும் என்றால்..
மக்களை அரசு இன்றே நடுத்தெருவில்...
நாடு நாடாக அனுப்பி பிச்சை எடுக்க வைக்கலாம்.. நாட்டின் வளம் பெருகும்... மக்களின் நலனுக்காக செலவிடும் வாய்ப்பும் குறையும்...

இந்தியா விவசாய நாடு... ஆனாலும் பல விளைபொருட்கள் இன்று இறக்குமதி செய்யப் படுகிறது... நம் நாடு உணவு உறபத்தியில் சிறந்து விளங்கினாலே போதும் இந்த உலகிற்கே உணவளிக்கும் நாடாக மாறிவிடும்.. பொருளாதாரமும் உயரும்...

இங்கே விவசாயம் மூலம் அரசுக்கும் சரி ஆட்சியாளர்களுக்கும் சரி எந்த வகையிலும் வருமானம் இல்லை என்பதனை நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.. ஆம் விவசாய உற்பத்திக்கு வரி இல்லை.. அதுவே இந்த விவசாய நிலத்தினை தொழில் திட்டங்களாக மாற்றினால் வரியும் உண்டு.. தங்களுக்கு பங்கும் உண்டு என்பதனை நன்கு உணர்ந்து நமக்கு நாமம் பூசக் கற்று வைத்துள்ளனர்...


மக்களாகிய நாம் தான் உனர வேண்டும்... இன்று நாம் மின்சாரத்தினை உற்பத்தி செய்ய இடம் அளித்து அருகில் உள்ள மாநிலங்களுக்கு தர அனுமதிக்கிறோம்.. ஆனால்.. அவர்கள் காவிரி நீர் தர மறுக்கின்றனர்...

அதே போலத்தான்... இங்கு விளையும் காய்கறிகள் தான் பரவலாக அந்த மாநில காய்கறித்தேவையினை பூர்த்தி செய்கிறது... ஆனால்... அவர்களின் அக்கறையினை முல்லைப் பெரியார் அணை விசயத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள்...

இதுவரை அருகில் இருந்தவர்கள் தான் நமக்கு ஆப்பு வைத்தார்கள்.. இன்று... நமக்காக.. என்று.. கூறியவர்கள்... நமக்கு இதுவரை நாமம் மட்டுமே பூச நினைத்தவர்கள்.. மொத்தமாய் ஆப்பு வைக்க தயார் ஆகிட்டு இருக்காங்க...


தமிழ்ர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டு மரமாகத் தான் மிதப்பேன்..
அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்
என்று தத்துவம் பேசுபவர்... நமக்கு ஆப்பு வைக்க தயார் ஆகிக் கொண்டிருக்கிறார்... என்றே நினைக்கத் தோன்றுகிறது...

ஆனால்.. இது குறித்து யாரும் மறுப்பு தெரிவிக்க வில்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியத்தினை நமக்கு அளிக்கிறது.. இதுவரை எந்த விவசாய அமைப்புகளோ எதிர் கட்சிகளோ இது குறித்து எந்த வித கருத்தினையும் அளித்ததாகத் தெரியவில்லை...

ஏன் இந்த மவுனம்...? என்றும் தெரியவில்லை.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் பரவலாக அனைத்து ஊர்களிலும் உள்ள பொது ஆழ்குழாய் கிணற்றிற்கு அருகில் சுமார் 200 மீட்டர் அளவில் போர் அமைத்து மண் மாதிரிகள் சேகரித்தனர்.. இது குறித்து அப்போது விளக்கம் கேட்கப் பட்டபோது.. நிலத்தின் தன்மை நிலத்தடி நீரின் தன்மை பரிசோதனைக்காக என்ற தகவலே கிடைத்தது..

இன்று தான் தெரிகிறது.. காரணம்..


நீங்கள் இதனை ஒரு செய்தியாக படித்தால்... இதனை ஒரு கட்டுரையாக நினைத்துப் படித்திருந்தால்... பதில் கருத்துரையினை தயவு செய்து கருத்து சொல்ல வேண்டும் என்ற நினைப்பில் கருத்திட நினைத்தால் .. தயவு செய்து கருத்துரையிடாதீர்கள்..


இந்த தமிழகத்தின் எதிர்கால வளம் குறித்து .. இந்த உலகத்தினை பாதுகாக்கும் இயற்கை ஆர்வலராய்... இருந்தால்.. மட்டும் உங்கள் கருத்துரையினை இடுங்கள்.. இத்துடன் இணைக்கப் பட்டுள்ள வீடியோ காட்சியினைப் பாருங்கள்.... நாளை இந்த பிளாட்டினம் மூலம் கிடைக்கும் வளத்தின் மூலம் பசிக்கு பிளாட்டினத்தினயும்,பணத்தினையும் உண்ண முடியுமா? சிந்தியுங்கள்>.. உங்கள் கருத்துக்களை உரித்தாக்குங்கள்...

மேலும் குறித்த முழுமையான தகவல் சேகரிப்போடு விரைவில் இன்னும் விளக்கமாக உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.... தமிழா நீ தமிழன் என்று சொல்லப்பட்டே... ஏமாற்றப் படப் போகிறாய்... இதனை உணர்வாய்... முதலில்... கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் எதற்கு என்ற தமிழ் பழமொழியை கொஞ்சம் நினைத்துப் பார்க்க மறந்து விடாதே...


நேற்று... இன்று .... நாளை.....


நாளை தின்ன என்ன செய்வாய்... சிந்திப்பாய்..


நன்றி: வீடியோ: ப்ரியா அபி(youtube)


- நான் முட்டாள்...
ஆமாங்க... நான் இந்தியனாய் தமிழனாய் இருக்கும் மனிதன்... நீங்க.....



செவ்வாய், 29 ஜூன், 2010

அடடா... இதுவல்லவா... அரசியல்.. மாநாடு நடத்துவார்கள்... அதில் பேசுவார்கள்.. அப்போது மட்டும் காற்று பலமாக வீசி தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கும்...

காலம் செல்லும் வேகத்தில்... நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்...
இங்கே நாம் ஏமாற்றப்படுவது ஏதேனும் ஒரு வகையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது..
இதற்கு நல் உதாரணம்...

தமிழகத்தில் பரவலாக 3 மணிநேரம் இருந்த மின்வெட்டு 2 மணிநேரமாக குறைக்கப் பட்டது...
ஆனால்... கடந்த 23 முதல் மின் வெட்டு நிறுத்தப்பட்டு.. மின் வினியோகம் சீராக விநியோகிக்கப் பட்டது...
அனைவரும் செம்மொழி மாநாட்டினை காரணம் காட்டினர்...
ஆனால்.. எங்கள் வட்டார மின் பகிர்மான பொறியாளர்..பத்திரிகைக்கு ஒரு பேட்டி அளித்தார்... மின் சீரான விநியோகத்திற்கும் செம்மொழி மாநாட்டிற்கும் சம்மந்தம் இல்லை..
காற்று அதிகப்படியாக சீராக வீசுவதால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது... எனவே மின் விநியோகம் சீராக்கப் பட்டிருக்கிறது.. என்றார் அதில்..
இன்னொரு கொசுறு. எங்கள் பகுதியில் இரு முனை மும் முனை மின் மாற்றத்திற்காக மின்சாரம் நிறுத்தப் பட்டால்.. 1 நிமிடத்திற்கு பிறகே மின்சாரம் வரும் ஆனால்.. எரியும் விளக்கின் ஒளி மறைந்து இருள் பரவும் முன்பே மின்சாரம் வந்தது...

அட என்ன ஆச்சர்யம்.. தமிழக மின் துறையின் வளர்ச்சி கண்டு பெருமை கண்டேன்...
ஆனால்... செம்மொழி மாநாடு முடிந்த உடன் நேற்று முதல்.. மீண்டும் மின் வெட்டு ஆரம்பிக்கப் பட்டு விட்டது..
அடடா... இதுவல்லவா... அரசியல்..
மாநாடு நடத்துவார்கள்... அதில் பேசுவார்கள்.. அப்போது மட்டும் காற்று பலமாக வீசி தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கும்... மின்சாரம் சீராக கிடைக்கும்... அதுவே.. அவர்கள் பேச்சினை நிறுத்தி விட்டால்... காற்றும் நின்று விடும்.. மின்சாரமும் நின்று விடும்...
அடடா... இதுவல்லவோ மக்கள் பணி...
அதிகாரியும் கூட அரசியல்வாதி ஆகிவிட்டார் போல..

கேட்பவன் கேனயன் என்றால்... கேப்பையில் நெய் வடியும் என்று என் தாத்தா சொன்னதும்..
கேட்பவன் கேனயன் என்றால்... எருமை கூட ஏரோப்ளான் ஓட்டும் என்று சிறு வயதில் என் நண்பன் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது...

யார் கேனயன் முடிவு நம் கையில்...

வாழ்க இவர்களின் ஜனநாயகம்... வாழ்க இவர்களின் மக்கள் பணி... அட இதுவல்லவோ அரசியல்..

அண்ணாச்சி... நம்ம கலைஞர் வீட்டிலும் 2 மணி நேரம் மின் வெட்டு அமலுக்கு வருமா...?

திங்கள், 26 ஏப்ரல், 2010

அரசியல்வாதிகளின் அருமையான பொழுதுபோக்கு.. பொது வேலை நிறுத்தம்

அடேங்கப்பா... நாளைக்கு வேலை நிறுத்தமாம் ... நாடு தழுவிய வேலை நிறுத்தமாம்... இதனால் யாருக்கு என்ன இலாபம்...

சரி இதைப்பத்தி பேசும் முன் எதற்கு இந்த வேலை நிறுத்தம்... ?
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாளை நடத்தும் பொதுவேலை நிறுத்தமாம் இது?

சரி இந்த விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்? அரசாளும் அரசியல் வாதிகளா?
ஆம் என்று முழுமையாகச் சொல்லிவிட முடியாது... காரணம் அரசாளும் அரசியல்வாதியால் மட்டும் அல்ல இதுவரை அரசாண்ட அனைத்து அரசியல் வதிகளுமே தான் இதற்கு காரணம்...

ஆம் சரியான பொருளாதார கொள்கை மட்டும் ஒரு நாட்டில் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்திவிடாது....

முதலில் ஒருவர் மேலே குறை சொல்லும் பழக்கத்தினை நம் அரசியல் வாதிகள் என்று தான் நிறுத்துவார்களோ...!

இன்று ஆட்சியில் இருப்போர் விலைவாசி உயர்வுக்கும் , மின்வெட்டிற்கு காரணம் சொல்வர்... அதே இன்று நாடாளும் அரசியல்கட்சி எதிர்கட்சியாய் மாறும் போது ...? இந்த மாதிரியான நிலை வரும் போது என்ன சொல்லும்... அதற்கான காரணத்தினையா சொல்லும்...இன்று எதிர்கட்சிகள் சொல்லும் இதே வார்த்தைகளை தான் சொல்லும்... இல்லை... இல்லை... சொல்லியவர்கள் தான் இவர்கள்... இவர்களின் பொழுதுபோக்கிற்கு கிடைத்த விளையாட்டு மைதானம் நாளை பொதுமக்களுக்கு இடையுறாக ஒரு பொது வேலை நிறுத்தம் அறிவித்து அறிக்கை விடுவது..

என்ன காரணம் கிடைக்கும் எப்போது குறை காணலாம் எப்படி ஆட்சியை கலைக்கலாம்... எப்படி நாம் ஜெயிக்கலாம்... 500 தரலாமா? இல்லை ஓட்டுக்கு 1000 தரலாமா? .. நாம் எப்படி கல்லா கட்டுவது என யோசிப்பதும்... இடை இடையே சலிப்பு ஏற்படும் காலங்களில் இப்படி பொது வேலைநிறுத்தம் அறிவிப்பதுமே இவர்களுக்கு வேலையாகப் போனது..

விலைவாசி மட்டும் தான் ஏறியதா? நன்றாக யோசிக்க வேண்டும்.... கிராமத்தில் 40 ரூபாய் ஊதியம் வாங்கியன் இன்று தினம் 400 சம்பாதிக்கும் நிலை... இந்த ஊதிய உயர்வுதான் இன்றைய விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாரா?

இது தான் உண்மை... எங்கோ வேலைவாய்ப்பு இல்லை என்பதற்காக எல்லா பகுதிகளிலும் ஊரக வேலைவாய்ப்பினை அளித்த அர்சின் செயலும் இந்த விலைவாசிக்கு காரணம் ... அதற்காக இந்த பொது வேலைநிறுத்தம் செய்கின்றனர் எதிர்கட்சிகள் என்று காரணம் சொன்னால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது... காரணம் இன்று எதிர்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள்...

மக்களை முட்டாள்களாகவும்,சோம்பேறிகளாகவும் மாற்றிய இந்த அரசியல்வாதிகள் பற்றி என்ன சொல்ல?

சில வருடங்களுக்கு முன்பு கிராமத்தில் கூலி ஆட்களுக்கு ஊதியம் ரூபாய் 40 ... ஆனால் இன்று குறைந்த பட்சம் ரூபாய் 150... கேட்டால் விலைவாசி உயர்வு சம்பளம் கட்டாது சேர்த்து வாஞ்குறோம்னு சொல்வாங்க... இதே நிலைதான் எல்லா இடங்களிலும்... நாங்கள் ஆட்சியில் இருந்த போது விலைவாசி இந்த அளவுக்கு உயரவில்லை... என சொல்லும் அரசியல்வாதிகள் அன்றைய மக்களின் வருமானத்தினையும் இன்று மக்களின் வருமானத்தினையும் ஒப்பிட்டு பார்த்திருந்தால் .. இப்படி பேச மாட்டார்கள்...

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் விலைவாசி உயர்வு என்பது இருமடங்கு மட்டுமே...
ஆனால்... ஊதிய உயர்வு நான்கு மடங்கு வரை...

இந்த விசயங்களை யோசிக்க மாட்டார்களா?

முதலில் அரசும் சரி எதிர்கட்சிகளும் சரி.. பொது மக்களும் சரி... ஒரு விசயத்தினை நன்றாக சிந்திக்க வேண்டும்...
ஊரக வேலை அளித்த அரசாங்கம்.. வேலை வாய்ப்பு இல்லாத பகுதிகளில் இந்த வாய்பினை அளித்திருக்க வேண்டும்... அதை விடுத்து சரியான திட்டமிடல் இல்லாமல்... தன் ஓட்டு வங்கி பற்றி மட்டுமே சிந்தித்து.. இந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினை அமல்படுத்தியது மாபெரும் முட்டாள் தனம்...

ஊரக வேலைக்கு போனால் தினசை 100... அப்படி இப்படி பொழுது போனா சரி எனும் ஒரு சோம்பேரித்தனத்தினை அவர்களுக்கு விதைத்து விட்டது...

விவசாய பணிகளுக்கு, ஆள்பற்றாக்குறை என்பது கடந்த சில ஆண்டுகாலமாக விவசாயத்திற்கு மாபெரும் பின்னடைவு... இதற்கு ஒரு தீர்வு காணாமல்... இருந்த வேலை ஆட்களையும் ஊரக வேலைவாய்ப்புக்கு அழைத்தது அரசு...

தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் தானே தவறு.. அதைவிட அப்போது கொடுத்தால் நம் காசை அல்லவா கொடுக்கணும்... என அரசு பணத்தினை இன்றே மக்களுக்கு கொடுக்க நினைத்து விட்டார்கள் போலும்...

இங்கே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டது... விவசாயி மட்டுமே... வேறு யாரும் இல்லை... அரசு ஊழியர்க்கும் சரி... தனியார் ஊழியருக்கும் சரி... அவர்களுக்கு சம்பளம் வராமல் இல்லை...ஊதிய உயர்வும் இல்லாமல் இல்லை...

ஆனால் விவசாயிகளுக்கு?..
எந்த ஊதிய உயர்வு கிடைக்கிறது.... மழை இல்லாமல் போனால்... இந்த ஆண்டில் விவசாயிக்கு ஏற்ப்பட்ட நிலை தான்... பஞ்சத்தாலும் பட்டினியாலும் விலைவாசி உயர்வாளும் பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகளும், விவசாயம் சார்ந்த நபர்களும் மட்டுமே...!!

விவசாயிகள் நலன் சிறந்து வாழ்வு செழித்தால் மட்டுமே இந்த விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த முடியும்... அது விடுத்து .இந்த ஆட்சியாளர்களாலும் சரி... எதிர்கட்சிகளே நாளை ஆட்சிக்கு வந்தாலும் இந்த விலைவாசி உயர்வினை தடுத்திட முடியாது...

நன்றாக யோசித்து பாருங்கள்... எதற்கெடுத்தாலும் இப்படி வேலை நிறுத்த்ம அறிவித்தாலும் ஆட்சி மாறினாலும் யாராலும் விலைவாசி உயர்வினை கட்டுபடுத்த முடியாது,,,

வேலைநிறுத்தம் அறிவித்து பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் இந்த அரசியல்வாதிகளின் முகத்திரையை கிளிக்க யார் வரப்போகிராரோ?

இப்படி வேலைநிறுத்தங்கள் செயவதை விடுத்து.. தங்கள் சிந்தனைகளை விவசாயிகளின் நல்வழிக்கு பயன்படுத்தினால் மட்டுமே விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த முடியும்...

நம்மை முட்டாள்களலாக்கும் இது மாதிரியான... இல்லை இல்லை.. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைய பாதிக்கும் இதுமாதிரியான வேலைநிறுத்தங்கள் தேவை இல்லாத ஒன்று...

மக்கள் நலன் என கூறுபவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பது எந்த வகையில் நியாயம்...

...இது மாதிரியான வேலை நிறுத்தங்கள் அறிவிப்பதை தவிர்த்து அதற்கு என்ன செய்யலாம் என யோசியுங்கள்... அடுத்த மடலில் அரசியல்வாதிகள் அதிகரிக்கும் முட்டாள்கள்... இன்னும் கொஞ்சம் விளக்கமாய் அடுத்த மடலில் சொல்கிறேன்...

சனி, 3 ஏப்ரல், 2010

என் காலமும் காதலும் அவளுக்காக..... நான் முட்டாள்...

என் இதயம் சொல்லியது ... !!!
என் இதயம் அவள் என்று... !!!
என்னாலும் இதை உணர முடிந்தது..
ஆனால் அவள் இதை உணர்ந்தாளா... !!!
என்னால் இதற்கு பதில் காண முடியவில்லை.. !!!
கனவுகள் காத்திருக்குமா??
ஆனால் அவளுக்காக என் கனவு காத்திருக்கிறது... காரணம்...
என் உயிரே அவள் நினைவு என்பதனை உணர்ந்து கொண்டது ... !!1

காலம் என்பது காத்திருக்காது என்பார்கள்...!!!
ஆனால் என் காலம் அவள் காதலுக்காகவே காத்திருக்கிறது..
காத்திருக்கும் கணம் கூட சுகம் தான்..
அவள் நினைவில் தானே என் காலம்...!!! இதை
அவள் உணர்வது எக்காலம்.... !!!

நம்பிக்கை வெற்றி பெறும்.... !!!
நானும் நம்புகிறேன்... என்னோடு கரம் கோர்த்து
அவள் நடைபோடும் காலம் வரும் என....!!!
காத்திருப்பேன் அதுவரை.... அவள்
என்னோடு நடைபோடும் நாட்கள் குறித்த
கனவுகளோடு..... !!!

சித்திரம் அவள்... !!!
சிலம்பொலி அவள் குரல் என நான் அவளை
வர்ணிக்க வேண்டியது இல்லை... ஆம்
அவளுக்கு தெரியும்... என்
உயிரைவிட அவள் மேல் நான் வைத்துள்ள காதல்
பெரிதென நான் நினைப்பது.....!!!

சாதி எனும் சாக்கடையும்.....
தவறான காதலால் காதலை...
தவறென நினைக்கும் சமூகத்தின் பிரதிநிதிகளாய்
அவள் பெற்றோர்கள்.... என்ன செய்ய? ..... என
அவள் மனம் நினைக்கும்...
என்ன செய்ய...???

காதல் என்பது வெறும் உணர்வுகள் அல்ல...
காதல் ... மனம் சொல்லும் வார்த்தைகள்... கூட
அறிய முடியா வியாதி... !!!
என்னை காதலைப்பதாய் ஒருத்தி சொல்லிய நாள்...
காதல் இது தான் என நான் உணரவில்லை... இன்று
உணர்ந்தேன்... ஆம் நான் காதலிக்கும் போது ....!!!

வாழ்க்கையில் வசந்தம் வறுமையில்லாமல் இருந்தால்
அல்ல.... மனதில் வெறுமையில்லாமல் இருந்தால் தான்.....!!!
என் மனம் அவள் நினைவில் இன்று வசந்த வாழ்க்கை வாழ்கிறது... !!!
அவள் என் காதலை ஏற்காமல்... போய் விட்டால்...
வெறுமையில்... மனம் வாழுமா?
சொல்ல தெரியவில்லை... ஆனால்...
இதை அவள் உணர்வாள்...!!!

இதோ இதை நீங்கள் மட்டும் அல்ல
என்னவளாய் நான் நினைக்கும் என் அவளும் படிப்பாள்....
அவளுக்குத் தெரியும்....!!!
அவள் தான் இன்று என் இந்த வாழ்க்கை என்று...
ஆம்... நான் வாழும் இந்த வாழ்க்கை...
தனி மரமாய் இருந்த என்னை தோப்பாக்கிய
அவளுக்குத் தெரியும்...!!!
அவள் என்னோடு இருப்பாள் என்ற நம்பிக்கையில்...
நான் பெற்ற வெற்றி என்று.....!!!

என் காதலும் சரி...
என் காலமும் சரி...
என் அவளுக்காக மட்டுமே காத்திருக்கும்.... !!!
காத்திருப்பது அவளுக்காக....
என் வெற்றிகள் அவளுடையது...!!!
என் இந்த உலகமாய் அவள் மட்டுமே....!!!

செவ்வாய், 26 ஜனவரி, 2010

நான் புல்லாங்குழல்-ரம்யாசக்திவேல்........

நான் புல்லாங்குழல்-நான் முட்டாள்...........



குடியரசு தினம்...
கொடி ஏற்றி கொண்டாட வேண்டியதை குடி ஏற்றி கொண்டாடும்
மாணவர்கள்... எங்கே செல்லுது இந்தியா... வல்லரசாக மாற்றா விடினும் பரவாயில்லை...
இந்தியாவை நல்லரசாக்குங்கள் மாணவர்களே.... எனும் சில வரிகளோடு பல வரிகள்
உங்களை சிந்திக்க வைக்க....



குழந்தை தொழிலாளர்கள்......
என்ன சொல்வது ...
எத்தனை மூங்கில்கள்(குழந்தைகள்) இப்படி விறகாகி(குழந்தை தொழிலாளர்கள்) போகின்றதோ....
இந்த மூங்கில்
தங்களை புல்லாங்குழல் ஆக யாரும் மாற்ற மாட்டார்களா....?
என்று ஏங்கி நிற்கிறது...

வாழ்க்கை எனும் குடும்ப அடுப்பை எறிக்க இந்த மூங்கில்
தங்களை விறகாக்கி கொண்டு இருக்கின்றன....
காரணம் வறுமை...

மொட்டு மலரும் என காத்திருப்பது ஒரு சுகம்.....
இங்கே மொட்டுக்கள் கருகுவதை பார்த்து ரசிப்பதில்
சுகம் காண ஒரு கூட்டம்.......

மூங்கில்கள் இங்கே புல்லாங்குழல் ஆவதும் சரி....
விறகாவதும் சரி....
இதில் எது சரி....?
விடை உங்களிடம்...!!!


இங்கே மக்கள் வெறுமையை(வெற்றிடத்தை) தேடுகின்றனர்....
வாழ்க்கையில் அல்ல.......
தங்கள் வாழ்க்கையின் வறுமையில் வெறுமை வரவேண்டும்...
இந்த வறுமை நம் வாழ்வைவிட்டு செல்ல வேண்டும்
இப்படி கனவு காணக்கூட விடவில்லை இந்த வறுமை....

இந்த வறுமைதான் நான் சொன்ன முதல் வரிகளை மீண்டும் இங்கே நினைவு படுத்துகிறது....
ஆம்... புல்லாங்குழல் ஆக மாறவேண்டிய இந்த மூங்கில்கள்(குழந்தைகள்) விறகாக்கப்படுவது இந்த வறுமையின் வெற்றி தான்.....

வறுமையினை வென்றவனும் இருக்கிறான்....
நல்ல புல்லாங்குழல் தான் அவனும்....
ஆனால்... ஆனால் புல்லாங்குழல்
தனது இசையை வெளிப்படுத்த ஒரு புல்லாங்குழல்
வாசிக்கத்தெரிந்தவனை தேடிக்கொண்டிருக்கிறது
வேலை இல்லா திண்டாட்டம் தான்...
இந்த புல்லாங்குழல் இசையை யாரையும் ரசிக்க விடவில்லை....

இதைவிட இன்னொரு விசயம் இந்த இடைப்பட்ட தருணத்தில்.....

இங்கே... இருப்பதும் நிஜம் இல்லை என்பது நிஜம்...
ஆம்...
இங்கு எல்லாமே இப்படி தான்....

உணவு, உடை, இருப்பிடம்......
இவை மூன்றும் மனித வாழ்வில் அசைக்க முடியா அங்கம்- என
மூன்றாம் வகுப்பில் என் ஆசிரியை கற்றுக்கொடுத்த விசயம் ....
நினைவில் தான்.... இந்த மூன்றும் மட்டும் இருந்துவிட்டால் .... போதுமா....? உணவு அது எப்படி இருக்க வேண்டும்....

""குழந்தைகளுக்கு காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி, உடல் உழைப்பையும், உடற்பயிற்சியையும் கட்டாயமாக்குவதன் மூலமே ஒரு நோயற்ற எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கி தர முடியும்'',

என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
எங்கே செல்வது இவைகளை பெற....

இங்கே தான் நான் சொன்ன வரிகள் முழுமை பெறுகிற்து ...
இருப்பது நிஜம் இல்லை என்பது நிஜம் ...
ஆம்...
நல்ல உணவுகள் இருக்கின்றது... ஆனால்
ஊட்டச்சத்து இல்லை....
இந்த பற்றாக்குறை மூங்கில்களை விறகாகக்கூட பயன் அளிக்க விடுவதில்லை... ஆரோக்கியம் என்பது உண்ணும் உணவின் ருசியில் இல்லை....
என்பதனை உணரவேண்டும்.... என மருத்துவ்ர் சொன்னார்....
அவருக்கு தெரியாதா....? என என் மனம் நினைத்துது உண்ண உணவே இல்லை ஊட்டச்சத்தை பற்றி நினைப்பது எங்கே......?

எத்தனையோ விசயங்கள்.....
ஒருமனிதனின் வாழ்வை திசை மாற்றிப் போக வைக்கிறது...... அதில் முக்கியமானது தீண்டாமை....
தீண்டாமை ஒரு பாவ செயல் ...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்....
தீண்டாமை ஒரு பாவச்செயல்....
என நான் படித்த காலத்தில் எனக்கு தீண்டாமை என்றால் என்னவென்றே தெரியாது...
சாதி,இனம் பாராமல் நான் படித்தது....
சாதிகள் இல்லையடி பாப்பா....!!!!
நண்பன் என்பது மட்டும் தான் எனக்கு தெரியும் என் நண்பனை பற்றி...
அவன் சாதி பற்றி தெரியாது... தெரிந்துகொள்ளவும் நினைக்கவில்லை....நான்...
ஆனால்.... கடந்தது காலம்...
ஆசிரியை ஒரு நாள் சொன்னது எங்களை பிரித்தது...
ஆம் என் நண்பனை அழைத்து சொன்னார்...
உனக்கு அரசு சார்பா எழுத நோட்டு தருவாங்க....
அத வாங்கணும்னா... சாதி சான்று வேணும் உங்க அப்பகிட்ட சொல்லுனு... சொன்னாங்க... அவனும் ஏதும் சொல்லாமல் தலை ஆட்டினான்...
நான் ஆசிரியையிடம் கேட்டேன்.... இன்றும் மறக்கவில்லை... டீச்சர் எனக்கும் தருவீங்களா?,...
ஆசிரியை சொன்னது அன்று பெரிதாக தெரியவில்லை...
இன்று அந்த ஆசிரியை மேல் கோபத்தை வரவழிக்கிறது.
ஆம் அன்று அவர்கள் சொன்னது இன்று ஒரு சமூக ஆர்வலனாக என்னை சுடுகிறது... ஆசிரியை சொன்னது இது தான்...
அவன் ********(சாதி பெயர் சொன்னார் அது இங்கே மறைக்கப்பட்டுள்ளது).. அதான் கவர்ன்மெண்ட் அவனுக்கு தர்றாங்க... என்றார்...
அன்று நான் தலை ஆட்டினேன்...
இன்று தான் உணர்கிறேன்...
தீண்டாமை ஒரு பாவ செயல்...
என கற்பித்த ஆசிரியை, சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதியின் கவியை கற்பித்த ஆசிரியை என் நண்பனை சாதியால் பிரித்து சொன்னது இன்னும் மனதில் ஒரு கோபத்தை ஒழித்து வைத்திருக்கிறது...
தீண்டாமை என்பது ஒழிக்கப்பட வேண்டும்...
இதனை எல்லோரும் நன்கு உணர வேண்டும்...
அப்போது தான் இந்த இந்தியா... வலிமை கொண்டதாக இருக்கும்...
தீண்டாமையை ஒழிக்க யாரால் முடியும் ...
வருங்கால துண்கள் என நம்மை வர்ணிக்கும் அரசியல் வாதிகளால் அல்ல.... நம்மால் தான் முடியும்...
அரசு பொருளாதார அடிப்படையில் சலுகைகளை வழங்கினாலே
தீண்டாமை ஒழிந்து விடும்...
அதை விடுத்து எத்தனை ஆண்டுகள் "தீண்டாமை ஒரு பாவசெயல்" என
பாடம் எடுத்தாலும் ஒழிக்க முடியாது.
ஒரு விசயம் தீண்டாமை ஒரு பாவச்செயல்
என கற்பிக்கும் அரசே தான் சாதி சான்றுகளை அளித்து
மக்களை பிரித்து வருகிறது என்பதனை நாம் உணர வேண்டும்.

தீண்டாமை என்பது உள்ளூர் பிரிவினைவாதம்....
நமக்கு இருப்பது ஒரு உலகம் ....
இந்த உலகத்தில் இருக்கும் நாம் இந்தியன்,அமேரிக்கன் என...
ஏன்... தமிழன்,கன்னடன் என பல பிரிவினைகளை சுமந்து கொண்டு தான் இருக்கிறோம்.....
இது தேவையான ஒன்றா சிந்தித்து பார்ப்பது நம் கடமை ...
சிந்திப்பது மட்டும் அல்ல சிந்திக்கவைப்பதும் நம் கடமை..

இந்த பிரிவினை வாதம் மட்டுமே..
இந்த உலகில் தீவிரவாதம், வறுமை, குழந்தை தொழிலாளர்கள்,
வேலையில்லா திண்டாட்டம் என அனைத்திற்கும் காரணம்...
இதனை எல்லோராலும் உணர முடிந்த உண்மை ஆனால்...
ஏன் உணர மறுக்கிறோம்...
சாதி எனும் பெயராலும்... மதத்தின் பெயராலும்
சம்பாதிப்பவர்களின் சுயநல எண்ணம் நம்மை சாதிக்குள்ளேயே இருக்க வைத்துவிட்டது....

இந்த குடியரசு தின நாளில்...
உங்கள் எண்ணத்தை வளமையாக்குங்கள்...
வறுமை......
குழந்தை தொழிலாளர்கள்.......
தீண்டாமை......
உணவு பற்றாக்குறை......
பிரிவினைவாதம்......
என எதுவும் இனி வேண்டாம்.....
மனிதம் மட்டுமே... போதும்... நான் இந்தியன் அல்ல... மனிதன் ...
என நீங்களும் உணருங்கள்...
மற்றவர்களுக்கும் உணர்த்துங்கள்.....
இன்னொரு சின்ன விசயம்...
நான் இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும்...
என் தோழி சொன்ன ஒரு விசயம் அவளுக்கு அது பெருமையாக இருந்தது... ஆனால் அது மற்றவர்களின் புன்னகையை இல்லை இல்லை 'புண்'னகை யை உணராததால் அது அவளுக்க்கு பெருமை. அது என்ன?
அவளது சகோதரிக்கு திருமணத்திற்கு ரூபாய் 70 ஆயிரம் செலவில் ஒரு புடவை எடுத்தார்கலாம்.. அது மட்டும் அல்ல
விருந்தில் பலவகை உணவுகளாம் சொல்லிக்கொண்டால் பெருமையாய் ....
வாழ்வில் ஒருமுறை தானே இப்படி செலவு செய்து திருமணம் செய்வது சந்தோசமாக இருக்கும் என்பது அவள் எண்ணம்...
இவர்கள் வாழ்க்கையில் ஒரு முறை தானே திருமணம்
என செலவு செய்கின்றனர்... ஆனால்...
வாழ்க்கையில் ஒரு முறை நல்ல உணவு கிடைக்காதா...
என ஏங்குபவர்கள் எத்தனை பேர்.... ஏன் ???
அதை நாம் உணர மறக்கிறோம்... இல்லை இல்லை மறுக்கிறோம்.....
விடை சொல்லிக்கொள்ளுங்கள்......

-நான்...
தமிழன் அல்ல...
இந்தியன்... அல்ல...
மனிதன்.

வறுமையில்.... சிக்காத மூங்கில் நான்....
இன்று புல்லாங்குழல் தான்.....
என்னை வாசிக்கத்தெரிந்தவர்கள் யாரும் இல்லை...
நான் வாசிக்கப்படவில்லை ஆனால்... இந்த
புல்லாங்குழல் வாசிக்கத்தெரிந்தவனை தேட வில்லை
புல்லாங்குழல் இசையை ரசிக்கத்தெரிந்தவனை தேடிக் கொண்டிருக்கிறது....

ரசிக்க தெரிந்தவனுக்கு புல்லாங்குழலை இசைக்கத் தெரியவில்லை எனினும்...
அதன் அருமையான இசையை பற்றி அறிந்தவனாக இருப்பான்.......



இந்த புல்லாங்குழல்.....

நான் முட்டாள்...

Copy right @ ssvel